1. நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம்!
இந்திய-சீன எல்லை மோதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் சிறப்பு விமான மூலம் நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு அவரது உடலக்கு மதுரை ஆட்சியர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கடுக்கலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
2. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு வெற்றி!
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா போட்டியிட்டது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே இந்தியாவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. தேர்தலிலும் அது பிரதிபலித்தது. 184 ஓட்டுகளைப் பெற்று போட்டியின்றி இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டது.
3. நாளை நள்ளிரவு முதல் அமலாகும் முழு ஊரடங்கு!
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை நள்ளிரவு முதல் சென்னை பெருமாநகராட்சிப் பகுதிகள் முழுவதிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை பெருமாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
4. மணிப்பூரில் கவிழும் பாஜக அரசு; ஆட்சியமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்!
மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சியும் (என்பிபி) சுயேச்சை எம்எல்ஏக்களும் விலக்கிக்கொண்டதன் மூலம், அக்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. முன்னதாக, மூன்று பாஜக எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்தனர். இச்சூழலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது.
5. சென்னை பல்கலைக்கழக அஞ்சல்வழி முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு!
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக அஞ்சல்வழி முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு மாலை 6 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதள முகவரி வாயிலாக அறியலாம்.
6. டென்டரில் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை பதில்!
பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டென்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனு தாக்கல் செய்கிறது.