100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர்
மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே நினைவாக பிரதமர் நரேந்திர மோடி இன்று 100 ரூபாய் நாணயத்தை காணொலி வாயிலாக வெளியிடுகிறார்.
பாஜகவின் முன்னோடிக் கட்சியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. இவர் அக்டோபர் 12, 1919-இல் பிறந்து, ஜனவரி 25, 2001-இல் மறைந்தார். இவரது பிறந்தநாளையொட்டி 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழையையொட்டி உயர் அலுவலர்களுடன் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பாஜகவில் இணைகிறாரா குஷ்பூ?
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டார்.
அப்போது, பாஜகவில் இணைகிறீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என பதிலளித்த அவர், காங்கிரசில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
போர் பதற்றம்: இந்தியா - சீனா 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை
லடாக் கிழக்கு எல்லையில் சீனா தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் உயிரை கொடுத்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
லடாக் தொடர்பாக இந்தியா - சீனா உயர் அலுவலர்கள் இடையே இதுவரை ஆறு கட்டங்களாக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் 7ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று (அக்.12) நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பும் எல்லைகளில் படைகுவிப்பை நிறுத்துவது தொடர்பான விவாதிக்கப்பட உள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டி
இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தில் உள்ள இரு அணிகள் மோதுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.