முதலமைச்சர் இன்று ராமநாதபுரம் வருகை
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்டம் வாரியாக சென்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று (செப்.22) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளார். காலை 9:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்து, நிறைவடைந்த திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதனையடுத்து அரசின் முக்கிய அலுவலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
பாஜக போராட்டம்
திமுகவை கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் இன்று ஏழு இடங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலந்தூரில் சுவர் விளம்பரம் செய்வதில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மே 17 இயக்கம் போராட்டம் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சாஸ்திரிபவனை இன்று முற்றுகையிடுவோம் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டி
ஷாா்ஜாவில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை வீழ்த்திய சென்னை, அடுத்த வெற்றிக்கான முனைப்புடன் களம் காண்கிறது.
மறுபுறம், முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் எதிா்பாா்ப்பில் ராஜஸ்தான் உள்ளது. காயத்தில் இருந்து குணம் அடையாத காரணத்தால் பிராவோ இன்றைய போட்டியிலும் ஆட மாட்டார் என தெரிகிறது. போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இன்றைய வானிலை அறிவிப்பு
மன்னாா் வளைகுடா, கேரள, கா்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான், வடக்கு வங்கக்கடல், தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று வீசும்.
எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நாளை வரை செல்ல செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.