நகரும் நியாய விலைக் கடை திட்டம் இன்று தொடக்கம்
மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் வகையில் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை இன்று காலை 9 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறாா்.
மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
மத்திய, மாநில அரசை கண்டித்து சிபிஎம் பேரணி
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய, மாநில அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் இன்று சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறுகிறது.
தாஜ்மஹால் திறப்பு
ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது. முன்னதாக, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தாஜ்மஹால் மார்ச் 17ஆம் தேதி மூடப்பட்டது. தாஜ்மஹாலுக்குள் செல்ல, ஒரு நாளுக்கு, 5,000 சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமிநாசினி பயன்படுத்துவது, முகக்கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவது உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெற்று பள்ளிக்கு வர வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நளினி வழக்கு இன்று விசாரணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் சிறையிலிருக்கும் நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இன்றைய ஐபிஎல் போட்டி
13ஆவது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. வெற்றியுடன் இந்த தொடரை தொடருவதற்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.