இ-பாஸ் தளர்வு இன்று முதல் அமல்
தமிழ்நாட்டில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவு இன்று (ஆக.17) முதல் அமல்படுத்தப்படுகிறது. ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் இ-பாஸ் கிடைக்கும்.
பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு
மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்குக் கால்வாய் பாசனுத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. டிசம்பர் 31ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
10ஆம் வகுப்பு சான்றிதழ் விநியோகம்!
10ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. வருகின்ற 21ஆம் தேதி வரை சான்றிதழ் வழங்கப்படுகிறது. பள்ளிகளில் அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. தனி மனித இடைவெளியை பின்பற்றி, உரிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சில சான்றிதழ்கள் இல்லை என்றாலும், முதலில் மாணவரை சேர்த்துவிட்டு, பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தொல்.திருமாவளவன் பிறந்த நாள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 58ஆவது பிறந்த நாள் இன்று.