சென்னை: தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் அரிசி, மண்ணெண்ணெய், சிலிண்டர் உள்ளிட்ட பல பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கக்கூடிய நியாயவிலைக்கடை அரிசி, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களைச் சிலர் வெளிமாநிலத்திற்குக் கடத்தி அங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
மேலும், அரிசியைக் குறைந்த விலையில் வாங்கி அதை பாலீஷ் செய்து கூடுதல் விலைக்கு விற்பதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகளவில் மானிய விலையில் கிடைக்கக்கூடிய பொருட்கள் கடத்தப்பட்டுப் பதுக்கி வைப்பதைத் தடுப்பதற்காகத் தமிழக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 779 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 கோடியே 58 லட்சத்து 11 ஆயிரத்து 430 ரூபாய் மதிப்பிலான 16 ஆயிரத்து 303 குவிண்டால் ரேஷன் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும், 1362 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 581 சிலிண்டர், 113 மற்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு 4 கோடியே 82 இலட்சத்து 95 ஆயிரத்து 112 ரூபாய் எனவும் 6 ஆயிரத்து 443 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 ஆயிரத்து 184 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 2020 ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 697 குவிண்டால் ரேஷன் அரிசி, 13 ஆயிரத்து 967 லிட்டர் மண்ணெண்ணெய், 425 சிலிண்டர் மற்றும் மற்றவை 115 என மொத்தம் 5 கோடியே 40 லட்சத்து 35 ஆயிரத்து 357 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 5 ஆயிரத்து 244 வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 ஆயிரத்து 898 நபர்கள் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 992 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு 47 ஆயிரத்து 114 குவிண்டால் ரேஷன் அரிசி, 21 ஆயிரத்து 342 லிட்டர் மண்ணெண்ணெய், 713 சிலிண்டர் மற்றும் மற்றவை 121 என மொத்தம் 7 கோடியே 63 லட்சத்து 8 ஆயிரத்து 588 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 ஆயிரத்து 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7562 நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தியதாக 1381 வாகனங்கள் பிடிபட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு 67 ஆயிரத்து 511 குவிண்டால் அரிசி, 15 ஆயிரத்து 217 லிட்டர் மண்ணெண்ணெய், 1 ஆயிரத்து 492 சிலிண்டர் மற்றும் பிற பொருட்கள் 124 என மொத்தம் 6 கோடியே 60 லட்சத்து 74 ஆயிரத்து 492 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 9 ஆயிரத்து 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 ஆயிரத்து 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தியதாக 2 ஆயிரத்து 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் இந்தாண்டு 26.07.2023 ஆம் தேதி வரை 16 ஆயிரத்து 122 குவிண்டால் ரேஷன் அரிசி, 2 ஆயிரத்து 852 லிட்டர் மண்ணெண்ணெய், 1 ஆயிரத்து 298 சிலிண்டர் மற்றும் மற்றவை 51 என மொத்தம் 2 கோடியே 79 இலட்சத்து 56 ஆயிரத்து 120 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த குற்றங்கள் தொடர்பாக 3 ஆயிரத்து 427 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 ஆயிரத்து 650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாக 975 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தல் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வது குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை வழங்கிய புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனைத் தடுப்பதற்காக ரேஷன் பொருட்கள் கடத்துவது தொடர்பாகப் பொதுமக்கள் புகார் அளிக்க 1800 599 5950 பிரத்யேக எண் வழங்கப்பட்டு உள்ளதாகவும், தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்; இருவரின் வியூகம் என்ன..?