சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 15ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்குப் பின், கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இளங்கோவன், இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 12) சட்டமன்றத்துக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை வரவேற்றார். சிறிது நேரம் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற அலுவலகத்தில் அமர்ந்திருந்த அவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்பு, வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் கலந்து கொள்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 20ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டினால் மாஸ்க் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்