Erode East By Poll: சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து இப்போது சொல்ல முடியாது என்றும் ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் கமல்ஹாசன் செயற்குழு உறுப்பினர்களுடன் சுமார் 1 மணி நேரமாக ஆலோசனையில் இன்று (ஜன.25) ஈடுபட்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதாக கூறினார்.
ஈவிகேஎஸுக்கு ஆதரவு அளிப்பதும் அவருடைய வெற்றிக்காக தானும் எனது கட்சியை சேர்ந்தவர்களும் உறுதுணையாக இருப்போம் என்றும்; மேலும் இப்பணிகளுக்காக மக்கள் நீதி மய்யம் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 18 வயது பூர்த்தியான ஒவ்வொரு வாக்காளரும் ஒன்று கூடி தங்கள் வாக்குகளை தவறாது பதிவு செய்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் பங்கு பெற வைப்பதோடு, காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், அப்போது நாடாளுமன்றத் தேர்தலின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ’நாங்கள் தற்போது எடுத்திருக்கும் முடிவு என்பது ஒரு அவசர முடிவு; நாடாளுமன்றத் தேர்தல் பற்றி இன்னும் ஒரு வருடம் கழித்து எடுக்க வேண்டிய முடிவை அவசரப்படுத்தி பெற முடியாது’ என்றார்.
எம்.பி. ஆகும் ஆசை உள்ளதா? என்ற கேள்விக்கு, ''கமல்ஹாசன் 'முதலமைச்சர்' என்று சொல்லும்போது கோபப்படாத நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்வதற்கு எதற்கு கிண்டல் செய்கிறீர்கள்; இருக்கலாம். மக்களுக்கு பணி செய்வதுதான் எனது ஆசை'' எனத் தெரிவித்தார்.
காங்கிரஸுக்கு ஏன் ஆதரவு கமல்ஹாசன் சொல்லும் விளக்கம்: இன்றைய நிலை என்பது அவசர நிலை. இப்போதைய நிலை தமிழ்நாட்டிற்கு பயன் உள்ளதாக வேண்டும் எனவும்; எதிர்வாத சக்திகளுக்கு கைக்கூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவே இது என்று பதிலளித்தார். மேலும், இப்போதைய முடிவு தான் இது எனவும், இன்னும் ஒரு வருடம் (நாடாளுமன்ற தேர்தல்) கழித்து எடுக்க வேண்டிய முடிவை அவசரப்படுத்தி இப்போது சொல்ல முடியாது எனவும் கூறினார். அத்துடன், காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, நாடு முழுவதும் நடைபயணத்தில் மும்முரமாக இறங்கி மக்களின் ஆதரவைப் பெறுவதில் முக்கியத்துவம் செலுத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை சந்தித்து, அவரது நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று ஆதரவு வழங்கினார். இச்சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்திய அளவில் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் கமல்ஹாசன் கவனம் செலுத்துவதாகவும், அதன் மூலம் இந்திய அளவில் தனது கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லலாம் எனவும், இவற்றைத் தொடர்ந்து அவர் பாஜகவை எதிர்க்கும் கூட்டணியில் மேலும் பலத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் பல பேச்சுகள் எழுந்தன.
இவைகளுக்கு ஏற்றாற்போல, ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023-ல் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் திமுகவுக்கு திருவோடு தான் கிடைக்கும் - மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ