ஆவடி ஓ.சி.எஃப். மைதானத்தில் அம்பத்தூர் காவல் துறை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையம் மூன்று மகளிர் காவல் நிலையம் என 18 காவல் நிலைய காவலர்களும் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர். விழாவிற்கு அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஈஸ்வரன் தலைமையில் சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தார்.
இதில் சென்னை கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் விஜயகுமாரி, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள், ஊர்காவல் படை காவலர்கள் என அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்துவந்து அசத்தினர். ஒவ்வொரு காவல் சரகம் சார்பில் தனித்தனியே அடுப்புகள் வைத்து பொங்கல் படைத்ததுடன் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, உறி அடித்தல் லக்கி சர்கிள் என பல்வேறு போட்டிகளை நடத்தி மிக உற்சாகமாகப் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இறுதியாக போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட அலுவலர்கள் பரிசுப் பொருள்களை வழங்கினர். இந்த விழா அன்றாடும் மன அழுத்தத்தில் பணியாற்றும் காவல் துறையினருக்கு இன்ப விழாவாக அமைந்தது என விழாவில் கலந்துகொண்ட காவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அதிமுக வெற்றிக்கு உதவிய திமுக எம்எல்ஏ ரகுபதிக்கு கோடான கோடி நன்றி'