சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் இறுதியாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதே பொதுக்குழுவில் ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அன்றிலிருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் மாறி மாறி நீதிமன்றங்களை நாடி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற ஒரு நீதிபதி கொண்ட அமர்வு பொது குழு செல்லாது என ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற இரு நீதிபதி கொண்ட அமர்வில் ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் பொதுக்குழு செல்லும் எனவும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈபிஎஸ் மூன்று நாள் பயணமாக டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசரிப்பு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
அப்பொழுது பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கிடைக்காததால் நான்கு நாள் பயணத்தை இரண்டே நாளில் முடித்துக்கொண்டு திரும்பினார். அப்பொழுது டெல்லி மேலிடம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்படுவதால் ஈபிஎஸ்சை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை என கூறப்பட்டது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு ஈபிஎஸ் தரப்பினர் அனுப்பி வைத்திருந்தனர். இது பரிசீலனையில் உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து இருந்தது.
டெல்லி பயணத்தில் பல முக்கிய தலைவர்களை ஈபிஎஸ் சந்திப்பார் என கூறப்படுகிறது. அதில் குறிப்பாக பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் அதிமுகவில் நிலவிக் கொண்டிருக்கும் ஒற்றை தலைமை குறித்தும் பேசப்பட இருக்கிறது.
குறிப்பாக ஈபிஎஸ் தரப்பில், 95 சதவீத நிர்வாகிகள் தங்கள் பக்கம் தான் இருப்பதாகவும், ஒற்றை தலைமையை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள் எனவும் கூற இருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக எங்கள் அணியில் இருந்தால் கூட்டணி பலமாக இருக்கும் எனவும் தெரிவிக்க இருக்கின்றனர்.
ஓபிஎஸ் அணியில் அவரை சேர்த்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரிடம் இல்லை. இதனால் தங்கள் தலைமையிலான அணிக்கே நீங்கள் ஆதரவு தர வேண்டும் உள்பட பல்வேறு விஷயங்களை விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். மேலும் டெல்லி மேலிடமும் சாதகமாக இருப்பதால் தேர்தல் ஆணையத்திலும் சாதகமான சூழல் ஏற்படும் எனவும் நம்பிக்கையோடு இருந்தனர்.
ஆனால் தற்பொழுது ஈபிஎஸ்சின் டெல்லி பயணம் ஓபிஎஸ் தரப்பினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே நீதிமன்றத்தில் பின்னடைவை சந்தித்த நிலையில் ஈபிஎஸ் டெல்லி பயணத்தின் மூலம் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் டெல்லி பயணத்தை முடித்தவுடன் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஈபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பயணத்தின் மூலம் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஈபிஎஸ் தரப்பு தயாராகி விட்டதாக தெரிகிறது.
மேலும் ஈபிஎஸ் க்கு இன்னமும் பல சவால்கள் காத்திருக்கிறது. முதலில் உச்சநீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு வழக்கு, இரண்டாவது தேர்தல் ஆணையத்தில் தான்தான் ஒற்றை தலைமை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். மேலும் இரட்டை இலை சின்னம் தனது தரப்பிற்கு வேண்டியது போன்ற சவால்களை ஈபிஎஸ் தரப்பு சந்திக்க வேண்டியுள்ளது.
இது குறித்து நம்மிடையே பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "டெல்லி மேலிடம் ஈபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கி இருப்பது அவருக்கு ஒரு வகையான வெற்றி தான். ஈபிஎஸ்சிற்கு அதிக ஆதரவு இருப்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் டெல்லி மேலிடம் ஈபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுமா என்பது தெரியாது.
எதிர்க்கட்சித் தலைவராக தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் சமர்ப்பிக்க உள்ளார் என்ற கருத்தை தான் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுவார்கள். ஆனால் அதில் அரசியலும் இருக்கிறது. ஓபிஎஸ்க்கும் இதேபோன்று இன்னும் ஒரு சில வாரங்களில் நேரம் ஒதுக்கப்பட்டால், இரண்டு பேரையும் ஒரே விதத்தில் தான் டெல்லி மேலிடம் பார்க்கின்றது என புரிந்து கொள்ளலாம்" என கூறினார்.
இறுதியாக அதிமுகவில் பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் டெல்லி மேலிடத்தையே சார்ந்திருக்கின்றனர். இதில் இறுதியாக தேர்தல் ஆணையம் யார் தரப்பை அங்கீகரிக்கின்றதோ அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் வழங்கப்படும். இந்த இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் ஒற்றை தலைமை யுத்தத்தில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: திமுகவின் உண்மை முகம் தெரிந்து விட்டது... இனி எந்த மாடல் பேசினாலும் மக்கள் நம்பபோவதில்லை... ஜி.கே. வாசன்...