சென்னை: கடந்த 2022 ஜூன் 23 அன்று, அதிமுகவின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்மகன் உசேனை ஓபிஎஸ் அவைத்தலைவராக முன்மொழிந்தார். இதனை ஈபிஎஸ் வழிமொழிந்தார்.
இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இரட்டைத்தலைமையை ரத்து செய்து, ஒற்றைத்தலைமையை உருவாக்க வேண்டும் எனவும், அடுத்த பொதுக்குழுவை கூட்ட தேதி அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கே.பி.முனுசாமி அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டு, ஒற்றைத்தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதனால் விழா மேடையில் இருந்து பாதியிலேயே ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேநேரம் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதற்கு முந்தைய இரட்டைத்தலைமை மட்டுமே செல்லும் எனவும் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில், ஜூலை 11 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கின் விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப்.23) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து இயங்குவார் எனவும், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் எனவும் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வர், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
இதில் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட தீர்மானங்களும் பொதுக்குழு தீர்மானங்களில் ஒன்றாகும். இந்த நிலையில் ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை, அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன? - முழுத்தகவல் தொகுப்பு!