தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்செய்துள்ளார்.
ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரைப் புறக்கணித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இது குறித்து எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505-க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி திமுக ஆட்சிக்கு வந்தீர்கள்.
தேர்தல் சமயத்தின்போது ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தான் போடும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று தமிழ்நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் முதலமைச்சர் கூறினார்கள்.
100 நாட்கள் ஆகியும் தீர்வு இல்லை
ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகியும் இதற்கு எந்தத் தீர்வும் எடுக்கப்படவில்லை. நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் நீட் தேர்வுக்கு நன்கு படித்து தயாராகுங்கள் என்று மாணவர்களுக்கு தெளிவான அறிவுரையும் வழங்காமல், மாணவ சமுதாயத்தினரிடையே பெரிய குழப்பத்தை இந்த விடியா அரசு ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். எனவே நீட் தேர்வு ரத்துக்கு தீர்வுகாணாததைக் கண்டித்தும். மாநிலத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்றறிக்கையை நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ஜெயலலிதா அரசு என்ன கூறியிருக்கிறதோ அதையே ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளனர்.
பேட்டியின்போது 14ஆவது நிதிக்குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வருவாயில் ரூ.75,000 கோடி இழப்பு என்றும், ரூ.25,000 கோடி திட்ட நிதி, முறையான பயனாளிகளுக்கு செல்லவில்லை என்றும் ஒரு தவறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
14ஆவது நிதிக்குழு குறிப்பிட்ட வரி, ஒரு உத்தேச மதிப்பீடுதான். ஆனால் அதுவே வசூலிக்கப்பட வேண்டிய வரி ஆகாது. அதேபோல் செலவு பற்றியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
வெள்ளை அறிக்கை விளம்பரம் தேடும் முயற்சி
வெள்ளை அறிக்கை ஒரு விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்துமே அரிசி குடும்ப அட்டைகளின் அடிப்படையிலேயே நடைபெறும்.
2006-2011இல், திமுக அரசு வழங்கிய கலர் டிவி, அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போருக்குத்தான் வழங்கப்பட்டது. இதே முறைதான் அம்மா அரசிலும் பின்பற்றப்பட்டது.
எனவே 2006ஆம் ஆண்டில் அவர்களது அரசே இந்தத் தவறை செய்தது என்கிறார்களா? மேலும், இது தவறு எனில் திமுக அரசு தற்போது வழங்கிய கரோனா நிதியில், அவர்கள் விரும்பிய மாற்றத்தை செய்திருக்கலாமே.
எனவே ஊதாரித்தனமான செலவு செய்த முன்னாள் அரசு என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனம் செய்த நிதி அமைச்சரைக் கண்டிக்கிறோம்
பொய் வழக்குகளுக்கு அஞ்ச மாட்டோம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுவதை கடுமையாகக் கண்டிக்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவுள்ள சூழ்நிலையில் இப்படி பொய் வழக்கு போட்டு கழக தொண்டர்களின் வேகத்திற்கு தடைபோட திமுகவினர் பகல் கனவு காண வேண்டாம். இதுபோன்ற பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்.
சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். எனவே உண்மைக்குப் புறம்பாக வழக்குகளைப் போட்டு, பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படுகிறது திமுக அரசு.
பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக
மூச்சுக்கு 300 தடவை பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுபவர் திமுக தலைவர் ஸ்டாலின். கடந்த 9ஆம் தேதியன்று கழக நாளிதழ் நமது அம்மா அலுவலகத்தின் பூட்டை உடைத்து திமுக அரசின் காவல் துறையினர் உள்ளே நுழைந்து சோதனை நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. சோதனையின்போது நமது அம்மா ஊழியர்கள் எவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அடுத்த நாள் வெளியிட வேண்டிய பத்திரிகையினை அச்சிட்டு வெளியிடுவதற்கு எங்களை உள்ளே அனுமதியுங்கள் என்று காவல் துறையினரிடம் பத்திரிகை ஊழியர்கள் எவ்வளவு கெஞ்சியும் ஒருவரைகூட உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனால் அன்றைய பத்திரிகை அச்சடிக்க முடியாமல், கடந்த 10ஆம் தேதியன்று வெளியிடப்பட வேண்டிய நமது அம்மா நாளிதழ் வெளிவரவில்லை. இது போன்று பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் உரை: மீண்டும் வழங்கப்பட உள்ள ’கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’!