சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை ஒன்றாக சந்தித்தார்.
இந்த சந்திப்பில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டிருப்பதால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல விவகாரங்கள் தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் அண்ணாமலை கலந்துகொள்ள உள்ளார் என்று இறுதி வரை செய்தி வெளியாகவில்லை. கர்நாடகா தேர்தலில் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலை தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருப்பதால் இது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே கருத்து மோதல்கள் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜகவின் மாநில நிர்வாகியாக இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்ததால் எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை கடும் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில் திமுகவினருடைய சொத்துப்பட்டியல் கடந்த ஏப்.14ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு, திமுகவில் இருந்து வந்த எதிர்ப்பை விட அதிமுகவில் இருந்து வந்த எதிர்ப்பு அதிகம் என்று சொல்லலாம். அதிமுகவின் பெயரை குறிப்பிடாமல், கடந்த முறை ஆட்சியில் இருந்த கட்சிகளின் சொத்துப்பட்டியலை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியது இந்த எதிர்ப்புக்கு காரணம் என்ன கூறப்பட்டது.
இந்த மோதலில் உட்சபட்சமாக, “அண்ணாமலை குறித்து இனி என்னிடம் பேசாதீர்கள். அவர் இன்னும் அரசியலில் முதிர்ச்சி அடையவில்லை. அவரை முன்னிலைபடுத்தவே இது போன்று பேசி கொண்டிருக்கிறார்" என எடப்பாடி பழனிசாமி பேசியது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது என பேசப்பட்ட நிலையில், “அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது, கூட்டணி குறித்து முடிவெடுக்க அண்ணாமலைக்கு உரிமையில்லை" என அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இது போன்று முட்டலும், மோதலுமாக அதிமுக - பாஜக கூட்டணி நகர்ந்து கொண்டிருந்த நிலையில் கர்நாடகா தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு, பொதுச்செயலாளர் சம்பந்தமாக நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் அதிமுக கர்நாடகா தேர்தலை மையமாக வைத்து முதலில் பாஜகவிடம் 3 தொகுதிகள் கேட்க, அதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. அடுத்ததாக புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளரை நிறுத்தி, இரட்டை இலை சின்னம் பெற டெல்லி உயர்நீதிமன்றத்தை எடப்பாடி பழனிசாமி நாடினார். அவரது எண்ணப்படி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது.
இதனால் பாஜக கேட்டுக்கொண்டதன் மூலம் புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக வாபஸ் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை நகர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் டெல்லி பாஜக அதிமுகவுடனான கூட்டணியையே விரும்புகிறது.
சமீபத்தில் “ஒரு சீட்டு, இரண்டு சீட்டுகளில் போட்டியிடும் கட்சி குறித்து பேச விரும்பவில்லை" என கர்நாடகா தேர்தலில் போட்டியிட்ட அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த மோதல் கர்நாடகாவிலும் வெடித்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக - பாஜக இடையே ஏற்படும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோரும் அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்தனர். சந்திப்பில், “திமுகவிற்கு மேலும் அதிமுக அதிகளவில் நெருக்கடி கொடுக்க வேண்டும். பாஜக - அதிமுக இடையே ஏற்படும் மோதல் போக்கு கூட்டணிக்கு நல்லதல்ல. நாம் பிரிந்தால் அது திமுகவிற்கு சாதகமாக அமைந்து விடும். இது அனைத்தையும் தெரிந்தும் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் செயல்படுகிறார்" என எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, “அதிமுக - பாஜக கூட்டணிக்குள் மோதல் போக்கு ஏற்படாதவாறு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் இருவரும் இணைந்து திமுகவிற்கான எதிர்ப்பை தீவிரப்படுத்துங்கள். இந்த முறை மோடியை அதிக இடங்களில் வெல்ல வைப்பதே பாஜகவின் இலக்கு. அதற்கு தகுந்தார் போல் செயல்படுங்கள். தமிழகத்தில் இருந்து வரக்கூடிய எம்.பிக்கு நிச்சயமாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும்.
மிகக்கூடிய விரைவில் தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகளுக்கான இடங்கள் குறித்து முடிவு செய்யுங்கள். இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிக அளவில் வெற்றியை எதிர்பார்க்கிறோம்" என எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டா இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு, ஓபிஎஸ் அணி மாநாடு, சமீப காலமாக அரசு கொண்டுவரும் மசோதாக்கள் மற்றும் மற்ற கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை போன்ற பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ்சிற்கான பாஜகவின் ஆதரவு நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் இந்த கூட்டணியில் இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசிய பல்வேறு விவகாரங்களை அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணிக்குள் இருக்கும் சலசலப்பை போக்கத்தான் இந்த சந்திப்பு. ஆனால் அண்ணாமலைக்கு இதில் விருப்பம் கிடையாது. தலைவர்கள் சேர்ந்தாலும் இரு கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இணைவது கடினம்.
1991 - 1996 வரை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா இறுதி வரை காங்கிரசுடன் மோதல் போக்கை தொடர்ந்து கொண்டு, 1996-ல் கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணி படுதோல்வியை சந்திதது. அது போலத்தான் இதுவும். அதிமுக - பாஜக இடையேயான மோதல், கூட்டணி கணக்குகளை தாண்டிவிட்டது. இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே பாஜக விரும்பும் சூழ்நிலைதான் நிலவுகிறது" என கூறினார்.