சென்னை: அரசியல் பழிவாங்குதலுக்காக காவல் துறையை தவறாக பயன்படுத்துவதை கைவிட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பின் வழி வாசலில் ஆட்சியை பிடித்த திமுக:
அந்த அறிக்கையில், ’திமுக அரசு எப்படி, பின்வழி வாசலில் வந்து ஆட்சியை பிடித்ததோ, அதுபோல் அரசியல் ரீதியாக ,நேர்மையான முறையில் எதிர்க்கட்சிகளை எதிர்க்க திராணியின்றி ,அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட்ட காவல் துறையை ,குறிபாக லஞ்ச ஒழிப்புத் துறையை தவறாகப் பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்ப் புகார் சுமத்தி, அமைச்சர்களுடைய வீடுகள் மட்டுமில்லாமல், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என்று குறைந்தது சுமார் 30 முதல் 40 வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காழ்ப்புணர்ச்சியில் அலுவலர்கள் பணி மாற்றம்:
’முந்தைய அதிமுக ஆட்சி மீது இந்த விடியா அரசு சுமத்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு சாதகமாக செயல்படாத, உடன்படாத, நேர்மையாக செயல்பட்ட அலுவலர்களை உடனடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. உடன்படாத, பணியிட மாறுதல் செய்ய முடியாத நிலையில் உள்ள அலுவலர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படுகின்றனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், ’வனத்துறை அலுவலரான வெங்கடாசலம் அதிமுகவின் அரசால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
வெங்கடாசலம் மரணத்தை சந்தேகிக்கிறோம்:
அவர் சுமார் 35 ஆண்டு காலம் வனத்துறை அலுவலர் என்ற முறையில் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய மூத்த வனத்துறை அலுவலர். மாதம் ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர். ஒரு திறமை மிக்க, அனுபவம் வாய்ந்த வனப் பணி மூத்த அலுவலர், இதுபோன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை.
லஞ்ச ஒழிப்புத் துறை பரிசோதனையில், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட பணம் மற்றும் இதர பொருள்கள் பற்றிய விவரங்களை அவரால் துறை விசாரணையின் போது கண்டிப்பாக விளக்கியிருக்க முடியும். ஆனால் விசாரணை என்ற பெயரில் அவரையும், சம்பந்தமே இல்லாத அவருடைய குடும்பத்தினரையும் வரவழைத்து உண்மைக்கு மாறாக சாட்சியம் பெறுவதே லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நோக்கமாக இருந்தது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அதனால் தான், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் செய்திகள், ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியினரான நாங்களும் சந்தேகிக்கின்றோம்.
விசாரணையில் பாரப்பட்சம்:
இதே லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட மற்றொரு சோதனையில், பொதுப்பணித் துறை பொறியாளர் வீட்டில் சுமார் 2 கோடிக்கும் மேல் மற்றும் இதர பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அத்துறையே செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், அவர் பணி நீக்கம் செய்யப்படவில்லை. மேலும் உடனடியாக கைதும் செய்யப்படவில்லை. 10 நாளில் அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான நாங்கள் இந்தத் தவறை சுட்டிக் காட்டிய பிறகுதான் அரசு மேல்நடவடிக்கை எடுத்துள்ளது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம், ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்ததுதான் வரலாறு.
காவல்துறைக்கு வேண்டுகோள்:
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள், காவல் துறையினரை கேட்டுக்கொள்வதெல்லாம், சட்டப்படி செயல்படுங்கள் மற்றும் நேர்மையாக செயல்படுங்கள் என்பதுதான். எனவே, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து, ஆளும் கட்சியினரின் ஆளும் கட்சியினரின்விருப்பங்களுக்கு ஏற்ப வளைந்து, நெளிந்து செயல்படாதீர்கள். ’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ’வெங்கடாச்சலம் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்’, என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:ஓபிஎஸ் - இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை: அதிமுக - அமமுக இடையே தள்ளுமுள்ளு!