சென்னை: இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 31 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், கல்வித் துறையில் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றது. குறிப்பாக, 2011இல் திமுக ஆட்சியில் உயர் கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர் சேர்க்கை, அதனைத் தொடர்ந்து 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 51 சதவீதமாக வளர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே உயர் கல்வித்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்தது.
கடந்த இரண்டு ஆண்டு காலம், விடியா திமுக ஆட்சியாளர்கள் நடத்தும் அலங்கோல அரசில், உயர் கல்வித்துறை சீரழிந்து விட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். துறையின் அமைச்சர் பொன்முடி, தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து, தமிழ் நாட்டின் இளைஞர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய உயர் கல்வித்துறையின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதால், தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.
இதையும் படிங்க: மும்பை - நாக்பூர் நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: அமர்நாத் பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு!
நடப்பு கல்வி ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று விடியா அரசு உத்தரவிட்டுள்ளது. விடியா திமுக அரசின் இந்த முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவசர கதியில் உருவாக்கப்பட்டு, அவசர கதியில் திணிக்கப்படும் பொது பாடத் திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர் கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பொது பாடத் திட்டத்தால் தமிழ்நாட்டின் உயர் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்த்தை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். தமிழ்நாடு உயர் கல்வித்துறை, கபட வேட திராவிட மாடல் ஆட்சியாளர்களிடம் சிக்கி, குரங்கு கையில் சிக்கிய பூமாலைப்போல் மாறி சின்னாபின்னமாகி உள்ளது வேதனைக்குரியது.
எனவே, கல்வித் துறையில் ஏதேனும் மாறுதல்களை கொண்டு வரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து, எதிர்கால தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘அண்ணாமலை நடைபயணத்தால் கால் வலிதான் மிச்சம்’ - அமைச்சர் ரகுபதி சாடல்!