சென்னை: அண்மையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'சனாதன ஒழிப்பு மாநாட்டில்' திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சனாதன கோட்பாடுகளை குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.
உதநிதியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, உதயநிதி மக்களை திசைத் திருப்பவே சனாதனம் குறித்து பேசுவதாக கூறியிருந்தார். இருவர்களின் பேச்சுகளும் இரு கட்சி ஆதரவாளர்கள் இடையிலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.
அதனை தொடர்ந்து, அந்த விவகாரம் குறித்து செப்டம்பர் 7ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகத்தில் தேடிக்கொண்டிருப்பதாக விமர்சித்து தெரிவித்திருந்தார்.
மேலும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மானநஷ்ட ஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.