சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்புகளும், ஜூன் 5ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளும் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கோடை வெயில் சுட்டெரிப்பதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு, ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஜூன் 9ம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை, அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கி பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் மாதந்தோறும் கூடி மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், "அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம் மாதந்தோறும், முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும். அடுத்தப் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் வரும் 9-ந் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
2023-24-ம் கல்வியாண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதையும், அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் குழந்தைகள் தடையின்றி சேர்க்கப்படுவதையும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்தாலோசிக்க வேண்டும். பள்ளியின் அருகிலோ, குடியிருப்பு பகுதியிலோ யாரேனும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேராமல் இருந்தால், அவர்களது பெற்றோரை சந்தித்து குழந்தையை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்த வேண்டும். அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வி கற்பது அவசியம்.
அரசுப்பள்ளிகளில் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு, நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு படித்து நிறைவு செய்த மாணவர்கள் அடுத்த வகுப்புகளில் தொடர்வதையும் உறுதி செய்ய வேண்டும். 10,11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதற்கும், அந்த மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் தகுந்த ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல்களை செய்தல், மேலும் பள்ளி வளாகத்தினை சுற்றிப்பார்ப்பதுடன், சமையலறை, பொருட்கள் வைப்பறை உள்ளிட்டவற்றையும் பார்வையிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேச்சு.. தமிழக ஆசிரியர் கூட்டணி வேதனை!