சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கற்றல் இடைவெளி: தமிழ்நாட்டில் கரோனா தாெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதுடன், பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டு, மாணவர்களுக்கான கற்பித்தல் பணியும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகள் சரியாக செயல்படவில்லை.
தொடக்கப் பள்ளி மாணவர்கள், 1 மற்றும் 2 ஆம் வகுப்பை முடிக்காமல் நேரடியாக 3 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து மாணவர்களின் கற்றல் இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் நடத்தப்பட்டது.
எண்ணும் எழுத்தும் திட்டம்: தமிழ்நாட்டின் தொடக்க வகுப்பறைகளில் கற்றல், கற்பித்தலின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், எட்டு வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும், பொருள் புரிந்து படிக்கவும், எண்மதிப்பு அறிந்து அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இதன் இலக்காகும்.
கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைச் சரி செய்வதே, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். இந்நோக்கத்தினை அடையும் வகையில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத் தலைமையின் கீழ் 2022 ஆம் கல்வியாண்டிலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்கு அழுத்தம்: மேலும், மாணவர்களுக்கு ஏற்கனவே மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்து அளிக்கப்பட்ட பாடப்புத்தகத்தை பயன்படுத்தாமல், மீண்டும் புதியதாக அச்சிட்டு வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் திறனை சோதிப்பதற்காக, கற்றல் அடைவுக்கான தரவுகளையும் எடுத்து அனுப்ப வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களை கொண்டு அடைவுத் திறன் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தனி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதோடு, வழக்கமான பாட புத்தகங்களையும் நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது.
அரசு பள்ளி ஆசிரியர் ராஜினாமா: இந்த நிலையில், எண்ணும் எழுத்தும் திட்டம் மன உளைச்சல் தருவதாக கூறி, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிகழ்வு கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், ஆலத்தூர் நாடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த குப்பண்ணன், கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி, பணியில் இருந்து விலகுவதாக அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்திருக்கிறார். பணிச்சுமை, பல்வேறு குழப்பங்கள் மற்றும் குளறுபடிகள் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் 44 ஆயிரத்து 84 காலியிடங்கள் - மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பு..!