சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரண்டு நாட்களுக்கு முன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சை சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளச் சென்றிருந்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகார்கள் சிலர் லிப்ட்டில் சென்றுள்ளனர். லிப்ட் சென்றுகொண்டிருக்கும் போது, பாதி வழியில் பழுதடைந்து நின்றுவிட்டது. பின்னர் பாதியில் நின்ற லிப்ட் கதவு திறக்கப்பட்டு அவசரகால வழியாக மீட்கப்பட்டனர்.
பின்னர் இது தொடர்பாக அமைச்சர் மருத்துவமனை நோயாளிகளிடம் விசாரித்த போது லிப்டை முறையாக பராமரிக்காததால், இதுபோல் அடிக்கடி பழுதடைந்து விடுவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் டி. சசிந்தரன் மற்றும் உதவிப் பொறியாளர் வி. கலைவாணி ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமை பொறியாளர் விரிவான சுற்றறிக்கை ஒன்றினை கடந்த நவ.25 அன்று அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில், மருத்துவமனைகளில் உள்ள லிப்டுகள் மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விழி பிதுங்கி நிற்கும் முதலமைச்சர்? - டிடிவி தினகரன் விமர்சனம்