சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள், கல்வி உதவித்தொகை, சிறந்த மாணவிகளுக்கு கோப்பைகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
புதிதாக 2 மகளிர் கலைக்கல்லூரிகள்
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'அறநிலையத்துறை சார்பில் சென்னையில் பெண்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இரண்டு மகளிர் கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார்’ என்றார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,'எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் எத்திராஜ் தனது இல்லத்தை கல்லூரிக்காக அளித்தார்.
நீதிக்கட்சி முதன்முதல் தொடங்கப்பட்டபோது, அவரது வீட்டில்தான் முதல் கூட்டம் நடைபெற்றது. தனது வாழ்நாளில் வழக்கறிஞர் பணியில் சம்பாதித்தவற்றை பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக எத்திராஜ் செலவிட்டுள்ளார்.
மாணவிகளுக்கு வகுப்புகளில் பாடம் எடுக்கும்போது ஆசிரியர்கள் சமூகநீதி, பெண்கள் உரிமை போன்றவற்றை கூடுதலாக கற்பிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'ஏற்கெனவே அறிவித்தது போல் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்த பின்னர் தான், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும்' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சோதனைக் களம் அல்ல...சமூக நீதியின் பலி பீடமும் அல்ல!