சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும் விதிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் ஆன்லைன் வழியில் 4 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு இனி 7 நாட்களுக்கு பதில் 2 வார காலத்திற்கு நடைபெறும்.
ஜூன் 20 ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி ஜூலை 19ந் தேதி வரை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 15 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறைத்து புதிய விதிமுறையைத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்த பின்னர் மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளுக்குச் செல்கின்றனர். இதனால் ஏற்படும் காலியிடங்களை தவிர்க்க இந்த நடை முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலையில் உள்ள 2,240 இடங்களில் 419 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்த பின்னர் கல்லூரியில் சேரவில்லை. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் 212 பேர் மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளுக்கு சென்றனர். இதனால், 631 இடங்கள் காலி ஆனது.
பொறியியல் படிப்பு கலந்தாய்வில் 80,524 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 13 ஆயிரத்து 856 பேர் கல்லூரியில் சேரவில்லை. மேலும் கலந்தாய்வு கல்லூரியில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களில் வேறு கல்லூரியில் இடம் கிடைத்ததால் 17,101 மாணவர்கள் அந்தக் கல்லூரியில் இருந்து விலகி வேறு கல்லூரியில் சென்று சேர்ந்தனர்.
அந்தவகையில் இனி மேல் இடங்களை தேர்ந்தெடுத்து 7 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த தவறினால் அந்த இடம் காலியிடமாக கருதப்பட்டு தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள மாணவர் முன்னர் நகர்த்தப்பட்டு காலியாகும் இடம் அந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடக்கம்!