சென்னை: பொறியியல் படிப்பில் சேர ஜூலை 26 முதல் ஆக.24ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் www.tneaonline.org www.tndte.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதில், பொறியியல் படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் சேர 2 ஆயிரத்து 426 விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் தகுதியான 2 ஆயிரத்து 259 வீரர்ரகளுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நேற்று (ஆக.23) நடைபெற்றது. இப்பணி மீண்டும் வரும் 28ஆம் தேதியும் நடைபெறுகிறது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான சான்றிதழ் சரி பார்க்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனை தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் லெக்ஷ்மி பிரியா பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திட்டமிட்டபடி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படும் என்றும், சேர்க்கையின் போது மாணவர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெறும் போது ரேண்டம் எண்கள் பயன்படுத்தப்படும்" என தெரிவித்தார்.
கலந்தாய்வு விவரங்கள்
மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் செப்., 4 ஆம் தேதி வெளியாகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்., 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 14 ஆம் தேதியிலிருந்து அக்., 4 ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி மாணவர்களுக்கு கட்டாயம்