ஆருத்ரா, ஹிஜாவு நிதி மோசடி: நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! - ஹிஜாவு
பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று பெருமளவில் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவு நிறுவனங்களின் வழக்கு விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடமிருந்து அமலாக்க துறையினர் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பொதுமக்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாயை ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎப்எஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் ஏமாற்றி உள்ளது. இந்த நிறுவனங்களின் மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆருத்ரா நிறுவனம் சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேரிடமிருந்து முதலீடாக 2,438 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது போலீசார் செய்துள்ளனர். மேலும் ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்.
இதே போல ஐஎஃப்எஸ் நிறுவனம் சுமார் 80,000 பேரிடமிருந்து 4,000 கோடி ரூபாயை முதலீடாக பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஹிஜாவு நிறுவனமும் இதே போன்று பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று சுமார் 4,000 கோடிக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் 2,000 கோடிக்கு மேலாக மோசடியில் ஈடுபட்டு இருப்பதை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விவரங்களை அமலாக்கத்துறையினர் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதாக என முதற்கட்ட விசாரணையை அமலாக்கத்துறையினர் துவக்கி உள்ளனர்.
ஐஎப்எஸ் நிதி நிறுவன வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏஜெண்ட் ஹரிஹரன் என்பவரின் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து சென்றனர். இந்நிலையில் ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி வழக்கு; தலைமறை குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் தக்க சன்மானம்!