சென்னை: கட்டுமான நிறுவனம் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் தன்ராஜ் கோச்சார் தொடர்பான அலுவலகங்கள், உறவினர்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், 10-க்கும் மேற்பட்டோர், இந்நிறுவனம் மீது புகார் அளித்தனர். அதில், “சென்னை பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில் கோச்சார் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறது. வட்டிக்கு பணம் கொடுக்கும் இந்த நிறுவனம், சரியாக வட்டி கட்டாதவர்களிடம் இருந்து நிலங்களை அபகரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.
சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம்
அப்புகாரின் அடிப்படையில் நில அபகரிப்பு, சட்டவிரோதமாக பண பறிமாற்றம் செய்ததாக கோச்சார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக நில அபகரிப்பு புகார் ஒன்றில், தன்ராஜ் கோச்சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதிக அளவில் வட்டிக்கு விடுவதாகவும், சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் நடத்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அமலாக்கத்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்று (செப்.28) சென்னை வேப்பேரியில் உள்ள கோச்சாரின் வீடு, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வீடு, என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 5 மணியிலிருந்து இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர் போராட்டம்