சென்னை: கண்டச்சிபுரம் தாலுகாவில் உள்ள சென்னகுன்னம் கிராமத்தில் நீர்நிலை மற்றும் மந்தை நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சேட்டு மற்றும் கனிக்கண்ணன் ஆகியோர் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதில் நீர்நிலை பகுதியில் அமைந்திருந்த கோவிலுக்கு தாசில்தாரர் சீல் வைத்திருப்பதாகவும், அந்த சீலை அகற்றி கோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என எதிர்மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், எந்த அனுமதியும் இன்றி கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த கோவிலை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
மேலும், மதத்தின் பெயரால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதி கோரிக்கை!