மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதே வேளையில், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகள் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் அளித்திட தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் (TamilNadu Accident and Emergency Care Initiative-TAEI) கீழ் செயல்பட்டுவரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் மார்ச் 2020 முதல் இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 118 பேருக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு அவசரகால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் 63 ஆயிரத்து 633 பேருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில், விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு ஏற்படுத்திக் கொண்ட 52 ஆயிரத்து 849 பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாம்பு கடித்த 19 ஆயிரத்து 947 பேருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நான்கு ஆயிரத்து 494 குழந்தைகளுக்கு அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகளும், நான்கு ஆயிரத்து 432 பேருக்கு மாரடைப்பிற்கான சிகிச்சைகள், ஏழு ஆயிரத்து 775 பேருக்கு பக்கவாத நோய்க்கான சிகிச்சைகள் என மொத்தம் இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 615 பேருக்கு அவசரகால சேவைகள் அளிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலன் காக்கும் பணிகள் மூலம் கரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தமிழ்நாடு அரசின் தொய்வில்லா செயல்பாடு அனைவரின் கவனத்தையும் தொடர் பாராட்டினையும் பெற்றுவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.