கோவையிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 10.05 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் காலை 11.05 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டும். ஆனால் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் வால்பகுதியில், சரக்குகள் வைக்கும் காா்கோ பிரிவிலிருந்து புகை வந்ததை விமானி கவனித்தாா்.
இதையடுத்து, அவர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து அலுவலர்கள் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அதன்படி, விமானம் 18 நிமிடங்கள் முன்னதாக(காலை 10.47 மணிக்கு) சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனா். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் புகைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தில் புகை வந்ததை கவனித்த விமானி எடுத்த உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக 174 பயணிகள் உயிா் தப்பினர்.
விமானத்தில் புகை வந்தது குறித்து விசாரணை செய்ய டெல்லியில் உள்ள விமானம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட மாரடைப்பு - பெண் பரிதாப உயிரிழப்பு!