சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றும்; வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’தற்போது அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் செய்யும்போதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை அமல்படுத்துகின்ற போதும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் தேவைப்படுகிறது.
எனவே, அரசுப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தற்போது படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும். இந்த பணிகளை வரும் 9ஆம் தேதி முதல், 12ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். இந்த ஆண்டு 8 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவுள்ள நிலையில், 5.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அரசுப்பள்ளி மாணவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இது... கார்கில் போர் வீரருக்கு குடியுரிமையை நிரூபிக்கக்கோரி நோட்டீஸ்!