சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் இ.இ.எஸ்.எல் நிறுவனம் இணைந்து இந்த சேவையைத் தொடங்கியுள்ளன. இதில் மின்சாரக் கார்கள், மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஒரு மணி நேரத்தில் 80 சதவிகித சார்ஜ் நிரம்பிவிடும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 10 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தக்கட்டமாக சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா நகர் கிழக்கு மற்றும் கோயம்பேடு ஆகிய மெட்ரா ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்கள் சார்ஜ் வசதி ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தனியார் நிறுவனங்களும் சென்னையில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி ஏற்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன.
சூற்றுச்சுழல் மாசைக் குறைத்து இயற்கைக்கு உகந்த மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. அண்மையில் அதற்கான மின் வாகன கொள்கையை வெளியிட்டது. அதில் மின் வாகன உற்பத்திக்கான நடவடிக்கைகளோடு, மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளில் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்துதல், திரையரங்கம், மால் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சார்ஜிங் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: ரயில் முன்பு படுத்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி!