சென்னை: அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் பராமரிப்புப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சீரான மின் விநியோகம் வழங்கப்படும்.
மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மின் கம்பங்கள், மின்விளக்குகள் தயார் நிலையில் உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மழையைச் சந்திப்பதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது.
மின்னகத்தின் மூலம் 10 லட்சம் புகார்களுக்குத்தீர்வு காணப்பட்டு அரசு சாதனை செய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மின் நுகர்வோர்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதைப்பூர்த்தி செய்யும் வகையில் மின்வாரியம் செயல்படும்.
அன்புமணி ராமதாஸ் அவர்கள் திமுக அரசுக்கு கடிதம் எழுதுவதற்குப்பதில் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் நிலக்கரி கொள்முதல் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
என்னை அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளது என்பது தவறான செயல். அண்ணாமலை விளம்பரத்திற்காக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
மாநில அரசு, ஒன்றிய அரசு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறான செயல். மூன்றில் ஒரு பங்கு அரசும், மூன்றில் இரண்டு பங்கு தனியார் மூலமும் மின் உற்பத்தி செய்யப்பப்படுகிறது. அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுது மின்மிகை மாநிலம் என ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டண உயர்வால் மக்களுக்குப்பாதிப்பு இல்லை. மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு இல்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடை கூட மூடப்படவில்லை - அன்புமணி ராமதாஸ்