சென்னை தாம்பரம் அடுத்துள்ள வரதராஜபுரம் மகாலட்சுமி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவில் இருந்தே பல இடங்களில் பலத்த காற்று இடியுடன் மழை பெய்தது.
தாம்பரம் பகுதியில் இடியுடன் பெய்த மழையால் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் இடி விழுந்தது. இதனால் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் பயன்பாட்டில் இருந்த டிவி, சிசிடிவி கேமரா, மின் ஸ்விட்ச், ஃபேன், ஏசி, பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்கள் எல்லாம் வெடித்து சிதறின.
இந்தச் சம்பவம் குறத்து தகவலறிந்து வந்த மின்வாரிய அலுவலர்கள் மின் இணைப்பை சரிபடுத்த முயற்சித்தனர். ஆனால் இதுவரை மின் இணைப்பை சரி செய்ய முடியவில்லை. மின் இணைப்பு இல்லாததால் தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
ஆகவே விரைவில் மின் இணைப்பை மின்சாரத் துறை அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா: சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை!