சென்னை: கலைவாணர் அரங்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று (அக்.8) சென்னை வடக்கு, தெற்கு மண்டலங்களிலுள்ள உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "மின் நுகர்வோரின் புகார்களைத் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கும் வகையில் 'மின்னகம்' எனும் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையிலுள்ள இரண்டு மண்டலங்களில் 75 விழுக்காடு புகாரும், மற்ற மண்டலங்களில் 20 விழுக்காடு புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அலுவலர்கள் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. 58 விழுக்காடாக இருந்த அனல் மின் நிலைய உற்பத்தி 70 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நிலக்கரி காணாமல் போனது குறித்த முழுமையான அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காலிப்பணியிடங்களைப் பொறுத்தவரை ஏற்கெனவே பெற்ற விண்ணப்பங்களை பரிசீலிப்பதா புதிதாக விண்ணப்பங்களைப் பெறுவதா என்பதை காலச்சூழலை பொறுத்து தான் முடிவெடுக்க இயலும்.
வடகிழக்குப்பருவ மழையை எதிர்கொள்ள மின்வாரியம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுத் தயார் நிலையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 68 ஆண்டுகள் கழித்து டாடா வசமானது ஏர் இந்தியா