சென்னை, அம்பத்தூர் அடுத்த புதூர் பானு நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென மின் மீட்டர் பெட்டி, சுவிட்ச் பெட்டிகள் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது.
இதனால், செய்வது அறியாது திகைத்துப்போன பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். இதேபோல், அடுத்தடுத்து வீட்டில் இருந்த டிவி, ஃபிரிட்ஜ், பேன், மிக்சி, கிரைண்டர் போன்ற மின்னணு பொருள்கள் அனைத்தும் பழுதாகின. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து மின் வாரிய அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகியும் புதூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை தான் மின் இணைப்பு கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றியிலிருந்து வரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு வீடுகளில் உள்ள மின்னணு பொருள்கள் தீப்பற்றியதால் பெரும் அச்சம் ஏற்பட்டதாகவும், விரைவில் மின்மாற்றியைச் சீரமைத்துத்தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனிடையே, உயர் மின் அழுத்தத்தால் பாதிகப்பட்ட பகுதியை அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர் ஆய்வுசெய்தார். இது குறித்து அவர் கூறியதாவது, "உயர் மின் அழுத்தம் காரணமாக எரிந்த மீட்டர் பெட்டியை உடனடியாகச் சரிசெய்து தரப்படும். மின் இணைப்புப் பணியில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: காவல்துறை போல் நடித்து ரூ.12 லட்சம், 45 சவரன் நகை திருட்டு