தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து போட்டியிடும் வேட்பாளர் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னத்தில் மட்டுமே போட்டியிட முடியும் என தேர்தல் விதி உள்ளது.
ஆனால், விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், நாமக்கல்லில் கொங்கு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்னராஜ், ஈரோட்டில் மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, பெரம்பலூரில் ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தமிழ்நாட்டில் நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டனர்.
இதையடுத்து, தேர்தல் விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர் அந்தக் கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என தேர்தல் அலுவலருக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை செல்லாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக எம்.பி.க்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.