சென்னை துறைமுகப் பொறுப்புக்கழகத்தின் நிர்வாகப் பிரதிநிதிகளாகத் தொழிற்சங்கத்தினரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைமுறைகள் அக்டோபர் 15 முதல் 30ஆம் தேதிவரை நடைபெறும் எனத் துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டார்.
கரோனாவின் தாக்கம் குறையாமல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை குறைந்தபட்சம் 6 மாதம் தள்ளிவைக்க வேண்டும் என பாரதிய துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரான வி. செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலில் பங்கேற்க ஊழியர்கள் கூடும்போது கரோனா பரவ வாய்ப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம். சிலம்பரசன் வாதிட்டார்.
பின்னர், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை, சென்னை துறைமுகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குமரகுரு கூறியதாவது, "கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கும்படி துறைமுகத் தலைவர் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தேர்தல் பணியில் பல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தேர்தல் தொடர்பான படிவங்கள் பல்வேறு இடங்களில் வழங்கப்படுகின்றன. இதனால், பல ஊழியர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்படும்.
மேலும், முகக்கவசம், தகுந்த இடைவெளி ஆகியவை முறையாக கண்காணிக்கப்படும்" என உத்தரவாதம் அளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார் கூறியதாவது, "வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்ததுடன் துறைமுக நிர்வாகத்தின் கடமை முடிந்துவிடவில்லை.
அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது, வரிசையில் நிற்பது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், கிருமிநாசினி வழங்குவதையும் துறைமுக நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்" என அறிவுறுத்தினார்.
மேலும், தேர்தல் பரப்புரைகளை நேரடியாக நடத்தாமல், மின்னணு முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய - மாநில அரசுகள் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து வகையிலும் கடைப்பிடித்து, கரோனா தொற்று, ஒருவருக்குக்கூட பரவ இடமளிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
நீதிபதி, தேர்தல் காலத்திற்கு மட்டுமல்லாமல், வழக்கமான பணிக்காலத்திலும் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.