சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகத் தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக நூறு விழுக்காடு வாக்குப்பதிவு என்ற இலக்கோடு தேர்தல் ஆணையம் இயங்கிவருகிறது.
இதனை முன்னிட்டு அனைத்துத் தரப்பிலும் தேர்தல் ஆணையச் செய்திகள் சென்று சேரும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுத்துவருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, "அறிவிக்கப்படும் தேர்தல் குறித்த செய்திகள் அனைத்தும் சைகை மொழியில் பேசும் நபர் மூலம் உடனுக்குடனாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச முடியாதவர்கள் தேர்தல் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளலாம். இதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச முடியாதவர்கள் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்த முடியும்" என்றார்.
சைகை மொழிகளை விளக்கும் ஆசிரியர் சுரேஷ் பேசுகையில், "தேர்தல் ஆணையத்தால் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச முடியாத நபர்களும் வருகின்ற தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்கும்விதமாக அவர்களுக்குப் புரியும்வகையில் சைகை மொழியால் புரியும்படி விளக்கப்படுகிறது.
வாக்களிப்பது அனைத்து மக்களின் ஜனநாயக கடமை. அந்த வகையில் இவர்களும் தங்களுடைய வாக்குகளை 100 விழுக்காடு பதிவுசெய்து ஜனநாயக கடமையாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 24 மணி நேரமும் செயல்படும் 1950 என்ற இலவச தொலைபேசி எண், 180042521950 ஆகிய எண்களில் தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை மக்கள் உடனுக்குடன் பதிவுசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் செயல்படுத்திவருகிறது.