சென்னை: 2021-22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகள் ஏற்கப்பட்டுள்ளது.
அதிமுக பிளவுபடுவதற்கு முன்னதாக ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
எனவே இந்த பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்துள்ளனர். அதில் இன்று (டிச.21) ஓபிஎஸ் தலைமையில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இதுவரை தேர்தல் ஆணையம் அதிமுக விவகாரத்தில் எந்த தலையீடும் செய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், 2021-22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அதேநேரத்தில் இவ்விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் குஸ்தி.. பாஜகவின் வியூகம் என்ன?