சென்னை: சென்னை நந்தனம் எல்காட் அலுவலகத்தில், Electronics corporations of tamilnadu என்னும் எல்காட் (Elcot) நிறுவனம் சார்பில் புதிய கொள்முதல் இணையத்தின் தொடக்க நிகழ்வு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் எல்காட் நிறுவனத்தின் eproc.elcot.in என்னும் இணையத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள Requirements (தேவைகள்) உள்ளடக்ககத்தை பயன்படுத்தி அரசுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான வன்பொருள்களை (hardware) வெளிச் சந்தையை காட்டிலும் குறைந்த விலையில் வாங்க முடியும்.
இணையத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அனைத்து துறையிலும் மின்னணுவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசுத் துறையினரின் பணிகளை எளிமையாக்கி, கொள்முதல் பணிகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர, கோப்புகள் கையாளுவதில் கால தாமதத்தை குறைக்க 'மின்னணு கொள்முதல்' வலைதளங்கள் பயன் தருகின்றன.
அரசு துறைகளுக்கு எல்காட் மூலம் உதிரி பாகங்கள் வாங்கப்படுகின்றன, புதிய இணையம் மூலம் விரைந்து பொருள்களை வாங்க முடியும். புதிய இணையம் மூலம் அனைத்து அரசுத் துறையினரும் எளிதில் பொருள்களை வாங்க முடியும்.
புதிதாக தொழில் தொடங்கும் (start up) நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறோம். மேலும், சோழிங்கநல்லூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் குறித்து ஆட்சியர்களுடன் பேசி வருகிறோம், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையத்தில் 5 ஆயிரம் பொருள்கள் இருக்கின்றன. இவற்னை ஆன்லைன் மூலம் எளிதில், முறையாக, விரைந்து, குறைந்த விலையில் வாங்க முடியும்.
சந்தை விலையை விட குறைவாக இருக்கும், ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி ரூபாய் வரை எல்காட் மூலம் கொள்முதல் நடைபெறுகிறது. தற்போது அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இந்த இணையத்தில் பொருள்களை வாங்க முடியும். வரும் நாள்களில் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தி தரப்படும்.
பயனர் துறைகள் மற்றும் விற்பனையாளர்களுக்காக பயிற்சி காணொலிகள், கையேடுகள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு பிரத்யேக தொழில்நுட்ப உதவி மைய ஆதரவு எண் 044-24333015 எல்காட் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அரசு துறைகள் தங்களுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப வன்பொருள்களை கொள்முதல் செய்ய இவ்வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: நெய்வேலி என்எல்சி விரிவாக்கம்: மக்களவையில் பேசிய திருமாவளவன்.. அனுமதி மறுத்த சபாநாயகர்..