சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில், இன்று(டிச.19) புதியதாக 18 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே உலுக்கிய கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து சிங்கப்பூர் மற்றும் கேரளாவில் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த கரோனா பாதிப்பு தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது.
முன்னதாக, கரோனா தொற்று பாதிப்பின் போது, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முகக்கவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை இன்று(டிச.19) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களில், “தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் 230 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரை 6 கோடியே 97 லட்சத்து 68 ஆயிரத்து 990 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. திருவாரூரில் 9 பேருக்கும், திருவள்ளூரில் 2 பேருக்கும், கோயம்புத்தூர், விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒருவர் என 18 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எண்ணூர் பகுதியில் கடந்த 15 நாட்களாக 50% எண்ணெய் கசிவுகள் கூட அகற்றப்படவில்லை - பொது மக்கள் குற்றச்சாட்டு..!