சென்னை: சமீப காலமாகவே விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகளில் கடத்தல் தொழில் அதிகமாகி வருகிறது. இதனைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கடத்தல் ஓயந்தது போல தெரியவில்லை. ஆகையால் கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் சுங்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், துபாயிலிருந்து இலங்கை வழியாக, சென்னைக்கு பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருந்து, தனிப்படை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை மற்றும் துபாயில் இருந்து வரும், அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் படியாக வந்த பயணிகளை நிறுத்தியும் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 பெண் பயணிகள் உட்பட 5 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தனர். அதோடு அவர்களை தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று, பெண் அதிகாரிகள் துணையுடன், முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது அவர்களின் உள்ளாடைகள் மற்றும் உடலுக்குள் தங்கப் பசைகள், சிறிய தங்கத் துண்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அதே நேரம் இலங்கையில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர்களையும் நிறுத்தி விசாரணை நடத்தினர். அதோடு தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள்ளும், தங்கப் பசைகள், தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இன்று அதிகாலை இலங்கையிலிருந்து அடுத்தடுத்து சென்னை வந்த 2 விமானங்களில், 3 பெண்கள் உட்பட 8 பயணிகள், தங்க பசை, தங்க கட்டிகள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இவர்கள் 3 பெண்கள் உட்பட 8 பேருமே, இலங்கையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து ரூபாய் 6.5 கோடி மதிப்புடைய, 11 கிலோ தங்கத்தை, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு அந்த 8 பேரையும் கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இவர்கள் 8 பேருமே, தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் இலங்கையில் இருந்து துபாய்க்குச் சென்று, அங்கிருந்து சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் கொடுத்த தங்கத்தை, தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து, துபாயிலிருந்து இலங்கை வழியாக 2 விமானங்களில் சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த 8 பேரையும், தங்கம் கடத்தலில் ஈடுபடுத்திய சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ. 6.5 கோடி மதிப்புடைய 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 8 இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி விவகாரம்; மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!