சென்னை: பெரம்பூரில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜெ.எல் கோல்டு பேலஸ் நகைக்கடையில் சுமார் 6 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை ஓட்டை போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 10 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். தொடந்து குற்றவாளிகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிய தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர். பல நாட்களாகியும் போலீஸாருக்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு போலீஸார் இதே போன்ற குற்றங்களை மாநிலம் முழுவதும் தேட ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் சந்தேகப்படும் படியான இருவரை சிசிடிவி மூலம் காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அந்த காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். அதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் சோதனை செய்த போது, சந்தேகப்படும் படியான இருவரை காவல்துறை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் விசாரணையில் திவாகரன் மற்றும் கஜேந்திரன் கொள்ளையில் தொடர்புடையவர்கள என தெரியவந்தது.
ஆகவே திவாகரன் மற்றும் கஜேந்திரன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து விசாரிக்க திவாகரன் மற்றும் கஜேந்திரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் இரு நபர்களான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோரை மற்றொரு வழக்கில் பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் போலீசாரால் கைது செய்யப்பட்டதால், அவர்களை நேற்று சென்னை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க:ஓட்டைப்போட்டு தங்கத்தை ஆட்டைப்போட்ட கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
கைது செய்யப்பட்ட ஸ்டீபன் மற்றும் கங்காதரனை இன்று சென்னை தனிப்படை போலீசார் முறைப்படி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் ஜெகதீஷ், கொள்ளையர்களை 5 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.
இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மறைத்து வைத்திருப்பது எங்கே எனவும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மற்ற இரு கொள்ளையர்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஏற்கனவே கொள்ளையர்களான திவாகரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிந்துள்ளதால் அவர்களை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்கடை கொள்ளை வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறுகிறதா போலீஸ்?