நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதாக 2 வழக்குகளும், 2021ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக 2 வழக்குகளும் என மொத்தம் 4 வழக்குகள் சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 12-ஆம் தேதி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை முறையாக கைது காட்ட போலீசார் அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் இருந்து 4 வழக்குகளிலும் ஜாமின் கோரி மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளிலும் இன்று சவுக்கு சங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
குறிப்பாக இந்த வழக்கு சம்மந்தமாக பொது வெளியில் பேசக்கூடாது எனவும் தொடர்ந்து 15 நாட்களில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும் நிபந்தனையின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பதவிக்காக காலில் விழும் பழக்கம் இல்லை; ஓபிஎஸ்ஸை சந்திக்க ரெடி' - டிடிவி அதிரடி