சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், அதன் ரயிலில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வி பயணம் அழைத்துச் சென்றது.
சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை வரும் மெட்ரோ ரயிலில், ஏ.ஜி.டி.எம்.எஸில் இருந்து விமான நிலையம், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் ஆகிய மூன்று வழித்தடங்களில் இருந்தும் கல்வி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே 2018-19 கல்வியாண்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களை மெட்ரோ நிர்வாகம் கல்வி பயணங்களுக்கு இட்டுச் சென்றது.
அப்போது, மெட்ரோ ரயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் தரப்பட்டன. கடந்த கல்வி ஆண்டில் 60 பள்ளிகளிலிருந்து மொத்தம் 31,178 மாணவ மாணவியர்கள் மெட்ரோ ரயிலில் பயணித்து பயன் பெற்றனர் என்றும் வரும் (2019-20) கல்வியாண்டிலும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவ மாணவியர்களை மெட்ரோ ரயிலில் கல்வி பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.