சேலம்: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு முதல் முதலாக சேலம் சென்ற அவருக்கு திருவாகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆலமரம் போல் விரிந்து, பரந்து தமிழ்நாட்டில் வலிமையான இயக்கமாக இருப்பதற்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். தற்போது எம்ஜிஆர் விட்டு சென்ற பணிகளை தொடர்வதற்காக பல்வேறு சோதனைகளை கடந்து எம்ஜிஆர் கண்ட கனவை நிறைவேற்றி காட்டியவர் ஜெயலலிதா. அரசியலில் பல்வேறு சோதனைகளை கடந்து தான் ஜெயலலிதா சாதனை படைத்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 31 ஆண்டு காலமாக அசைக்க முடியாத கட்சியாக அதிமுகவை உருவாக்கி காட்டினார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். ஏழை மக்கள் ஏற்றம் பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியதும் அதிமுக தான். இந்திய திருநாட்டிற்கு முதன்மை முதலமைச்சராக ஜெயலலிதா விளங்கினார். கல்வியிலே புரட்சி மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் ஜெயலலிதா தான். ஏழை குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி, கல்வி கற்பதிலே முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்பதை உருவாக்கி காட்டினார்" என புகழாரம் சூட்டினார்.
மேலும், "தற்போது தீய சக்தி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விஞ்ஞான கல்வி மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியது. அதிமுகவை அழிக்க ஸ்டாலின் துடித்துக் கொண்டிருக்கிறார். அதிமுகவின் ஆட்சியில் இருக்கும் போது சிலர் அதிகாரத்தை அனுபவித்தார்கள். தற்போது அவர்கள் திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார்கள், அழிக்க பார்க்கிறார்கள். அழிக்கவும் முடியாது ஒழிக்கவும் முடியாது. நான் தலைவர்களின் பேச்சு கேட்டு படிப்படியாக உயர்ந்து உச்சபட்ச பதவியாக பொதுச்செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக வந்தாலே மின்தடை வரும். நிர்வாகத் திறமை இல்லாத அரசாங்கம், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர் தாக்கப்பட்டு அவர்களது நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. பாலியல் வனமுறை அதிகரித்து உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து உள்ளது. இது குறித்து சட்ட மன்றத்தில் பேசினாலும் பலனில்லை என விமர்சனம் செய்தார்.
அதோடு, "திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அங்கு தொண்டர்களுக்கு மதிப்பில்லை. அதிமுக அப்படி இல்லை. சாதாரண தொண்டனாக இருந்து இன்று பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன். அதிமுக உயிர் உள்ள கட்சி. மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி வரும். அதற்காக உழைப்போம்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் செம்மலை, முன்னாள் எம்.பி.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக்.. பெருங்காமநல்லூரின் தியாகச்சுவடுகள்..!