சென்னை: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு மத்தியரசு உத்திரவிட வலியுறுத்தி இன்றைய சட்டபேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
காவிரி விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக விவசாயிகளுக்கு நீரை பெற்று தருவதில் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் எனவும், தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடாதது சரியல்ல என்பதையும் தீர்மானத்தில் இணைக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டிய நீரை நாம் பெற்று தருவதில் முழு மனதோடு செயல்பட்டால்தான் முடியும் என்றும், குறிப்பாக காவிரி நீரை பெற்று தருவதில் அதிமுகவிற்கு இருந்த துணிச்சல் திமுகவிற்கு இல்லை என அவர் கூறியதையடுத்து சற்று நேரம் பேரவையில் கூச்சல் நிலவியது. பின்னர் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி காவிரி தொடர்பான தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு எனத் தெரிவித்தார்.
பேரவைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை தீர்மானத்தில் சேர்க்க கோரிக்கை வைத்தேன். கர்நாடகாவில் தேசிய கட்சி தான் மாறி மாறி ஆட்சி செய்தாலும் அந்த மாநிலத்தை பற்றி தான் சிந்திக்கிறது, தேசிய அளவில் சிந்திக்கவில்லை என்றார்.
அடுத்து வரக்கூடிய 7 மாத காலம் குடிநீர் தேவைக்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது என்றும், நீருக்கு அண்டை மாநிலத்தை நம்பி தான் இருக்கிறோம். தமிழக அரசு கவனமாக செயல்பட்டு நீரை பெற வேண்டும். திமுக நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அவையை முடக்கவில்லையெனவும், அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. அதற்கெல்லாம் தில், திராணி வேண்டும். ஆனால், அது இந்த அரசுக்கு இல்லை. விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர். அவர்களை சமாதானம் செய்யவே இந்த தீர்மானம் என நினைக்கிறேன். இந்த அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த நிலை” எனத் தெரிவித்தார்.