சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சமீபத்தில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது உட்பட 15 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே இருந்து வந்த சட்டரீதியிலான பிரச்னைகள் ஏறக்குறைய முடிந்த நிலையில் அதிமுகவில் அடுத்தது என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்த வரும் ஏப்ரல் 20ஆம் தேதி அதிமுகவின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில், வரும் ஏப்ரல். 20ஆம் தேதி பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை கோரி ஓபிஎஸ் தொடுத்த மேல்முறையீடு வழக்கில் இறுதி விசாரணை நடைபெறவுள்ளது தொடர்பாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்கு தற்போதே தயாராவது தொடர்பாகவும், இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணிகளை முடிப்பது தொடர்பாகவும், மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஏற்பாடு தொடர்பாகவும் ஆலோசனை செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 68,000 பூத்களிலும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், சமீபத்தில் திமுகவினருடைய சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, இதற்கு முன்பு ஆண்ட கட்சிகளின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன் எனக்கூறியுள்ளது தொடர்பாகவும், 2024க்கான அதிமுக கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகளும் தற்போதே பேச்சுவார்த்தை நடத்த தொடங்குவது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளில் திமுக செய்ய தவறியதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: பொதுப்பணித்துறையில் யார் குறுக்கீடும் இல்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி