சென்னை: அதிமுகவின் தலைமை கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டம் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், அனைவரும் கலந்துகொள்ளுமாறு அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுத்த எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்டமாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். தன்னுடைய தலைமையில் சந்திக்க இருக்கும் முதல் தேர்தல் என்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தயாராகி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஊழல் வழக்கிற்காக சிறை சென்றுள்ளார் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் அதிமுகவில் உள்ள தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். கடந்த முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். இதனையடுத்து அண்ணாமலையை திரும்பப்பெறாவிட்டால் கூட்டணி பரிசீலனை செய்யப்படும் என அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூறினர்.
இதன் தொடர்ச்சியாக அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னை இல்லை என்றும் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு பின்னால் பாஜக-அதிமுக கூட்டணி இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக,செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அழுத்தம் கொடுத்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு,பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான ஓபிஎஸ் கொடுத்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு பொதுச்செயலாளர் என அச்சிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கை பணிகள் மேலும்,கட்சி பிரிந்திருக்கும் நிலையில் மீண்டும் கிளை கழகத்தை புதுப்பித்தல் மற்றும் திமுகவிற்கு எதிரான விவகாரங்களை வேகப்படுத்துதல் போன்றவைகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஒரு சில மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் அவர்களை கண்டறிந்து நீக்கவும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்திருப்பதாவும் கூறப்படுகிறது. மூட்டு வலி காரணமாக சேலத்தில் ஓய்வில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஜூலை 5ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை எடப்பாடி பழனிச்சாமி வேகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:விடிய விடிய நடந்த மீன்பிடி திருவிழா... மூட்டை மூட்டையாக மீன்களை அள்ளிய மக்கள்!