சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது பழனிசாமி பேசுகையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மகளிருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
அப்போது அவர், "ஆண்டிற்கு ஆறு சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும். குடும்பத் தலைவிக்கு 1,500 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சியின் தொகுதிப்பங்கீடு விரைவில் வெளியிடப்படும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக - அமமுக இணைப்பு இல்லை.
அதிமுகவிலிருந்து சென்று பிற கட்சிகளில் இருக்கும் நபர்கள் மீண்டும் அதிமுகவில் இணையலாம், அவர்கள் நிர்வாகியாக இருந்தாலும் அதிமுக கட்சியில் மீண்டும் இணையலாம், மேலும் அதிமுக தலைமை இது குறித்து முடிவுசெய்யும்.
அதிமுக கூட்டணி மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி போன்ற இடங்களில் அதிமுகதான் வெற்றிபெற்றது.
எனவே மக்களிடத்தில் அதிக வரவேற்பு இருக்கிறது. திமுகவை பார்த்துதான் குடும்ப தலைவிக்கு 1,500 ரூபாய் அதிமுக வழங்குவதாக ஸ்டாலின் சொல்வார். ஆனால் நாங்கள் இது குறித்து பத்து நாள்களுக்கு மேலாக தேர்தல் பட்டியல் தயார் செய்துகொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.