பிரதமர் மோடி தலைமையில் நாளை (ஜூன் 15) டெல்லியில் வைத்து நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாநில அரசுகளின் திட்டங்கள், நீர் மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். முதலமைச்சருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தின்போது பழனிசாமி பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியேரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 5ஆம் தேதி மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் தமிழ்நாட்டின் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.