சென்னை: பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “7.5 விழுக்காடு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி மட்டுமே ஆளுநரை சந்தித்தேன். அந்தச் சந்திப்பு நம்பிக்கைக்குரிய வகையில் அமைந்தது.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; தேர்தலை சந்தித்து அதிமுக நிச்சயம் வெற்றி பெரும். ஆனால் அந்த நம்பிக்கை திமுகவிடம் இல்லை. இது திமுகவின் பலவீனத்தை காட்டுகிறது.
அதிமுக உறுதியாக உள்ளது” என்றார்.
இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனின் பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கு மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர்” என்றார்.
மேலும், “கரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தால் மட்டுமே அதனை ஒழிக்க முடியும். எனவே, பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்” என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி மகள் மீதான சைபர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை, “மனித ஜென்மம் அற்றவர்கள் என்று கூறிய ஜெயக்குமார் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்றும் காட்டமாக பதிலளித்தார்.
கமல்ஹாசன் குறித்து பேசுகையில், “கடவுள் இல்லை என்று கூறும் கமல்ஹாசன், வாக்குக்காகவும், அரசியலுக்காகவும் மதம் குறித்து பேசி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!